சினிமாவில் சில பேர்வழிகள் இருப்பார்கள், தாம் நடிப்பதை மக்கள் விரும்புகிறார்களா இல்லையா என்று தெரிந்து கொள்ளாமல், தொடர்ந்து வரிந்து கட்டிக் கொண்டு படங்களை நடித்து தள்ளுவார்கள். அப்படித்தான், நானும் பிறருக்கு பிடிக்கிறதா இல்லையா என்று கூட தெரிந்து கொள்ளாமல் என் விருப்பத்திற்கு இது நாள் வரை எதை எதையோ எழுதி பதிந்திருக்கிறேன், என்னுடைய அந்த மோசமான வரிகளையும் படித்து பொறுமை காத்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

என்னடா இவன் இவ்வளவு பீடிகை போடுகிறான். எதாவது விவகாரமா இருக்குமான்னு எல்லாம் நினைக்காதீர்கள், அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. பதிவுலகிற்கு எழுத்துகள் மூலம் அறிமுகம் ஆகும் முன்னரே பலரின் பதிவுகளையும் வாசித்ததுண்டு. அவர்களில் பெரும்பாலோனோர் ஒரு தலைப்பில் நிச்சயம் பதிவிட்டு இருப்பார்கள்..

அது..  நூறாவது பதிவு..
நாமும் என்றாவது ஒரு நாள் இது போன்று நூறாவது பதிவு எழுத வேண்டும் என்று அப்போதெல்லாம் நினைத்ததுண்டு. அந்த பருவம் எனக்கு எப்படி என்றால் முதல் 99 ரன்களை அடிக்காமலேயே 100 வது ரன்னை அடிக்க வேண்டும், சதம் அடித்ததாய் பெருமை கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சிறு பிள்ளையை போன்ற பருவம். ஆனால் அந்த ஒரு பதிவு எழுதுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று முழுதாய் இப்போது தான் புரிகிறது.

எழுதியதில் ஏதேனும் தவறு என்றால் பதிவின் பக்கத்திலியே இருக்கும் இடுகையை திருத்து வசதியை பயன்படுத்தி விடுவேன். அதனால் எடிட் போஸ்ட்ஸ் பகுதியை எப்போதாவது தான் பார்ப்பேன். அப்படி சில நாட்களுக்கு முன்னர் பார்த்த போது தான் தெரிந்தது, உங்களையும் தமிழ் அன்னையையும் பதிவிடுகிறேன் என்ற பெயரில் நூறு முறைகளையும் தாண்டி கொடுமை படுத்தி இருப்பது.

நூறு ரன் அடிச்சும், அது தெரியாம விளையாடிட்டு இருக்கிற ஒரு பேட்ஸ்மேன் எவ்வளவு உணர்ச்சிவசப் படுவானோ (இங்கு ஃபீல் பண்ணுவான் என்றால் நல்லா இருக்குமோ?) அப்படி இருந்தது எனக்கு. என்ன செய்வது, முடிந்து விட்டதே என்று சோர்ந்து விடவில்லை நான். அதெப்படி நான் பதிவெழுத தொடங்கியதற்கான முக்கியமான நோக்கங்களில் ஒன்றாயிற்றே இது (என்னா ஒரு நோக்கம்).

அப்புறம் யோசித்து பார்த்ததில் நாம் என்னத்த எழுதி இருக்கப் போகிறோம்,
கவிதை என்ற பெயரில் உரைநடையை சின்ன சின்ன வரிகளில் எழுதுவது,
சிறுகதை என்ற பெயரில் மொக்கை போடுவது,
எல்லோருக்கும் உதவுகிறேன் என்று வேண்டா விஷயங்களுக்கு விளக்கம் கொடுப்பது,
அரசியல் பதிவு என்று வேகாத பருப்பை தாளிப்பது,
சச்சின் புராணம் பாடுவது,
என்னமோ பெரிய இவன் மாதிரி இணைய கோப்புகளை அறிமுகம் செய்யறது,
சினிமா விஞ்ஞானி போன்று விமர்சனம் எழுதறது,
இதையெல்லாம் கூட தாங்கிக்கலாம் ஆனா கடைசியா சங்கத் தமிழ் எங்கத் தமிழ்ன்னு யாருக்கும் பிடிக்காததை உளறுவது
என்று கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ என்ற பயத்தில் தான் இந்த நூறாவது பதிவு இடுவதை ஒத்தி போட்டு இருந்தேன்.

ஆனால் இப்போது தான் ஒரு தைரியம் வந்தது, அட 99 ரன் அடிக்கிற ஒருத்தன் எப்படி நூறாவது ரன்னுக்கு அந்த 99 ரன் சேர்த்ததை விட அதிக கஷ்டப்படுறானோ அதே மாதிரி நம்மளும் இருந்திருக்கோம் னு. சரி இத்தனை நாட்களாக பொறுத்துக் கொண்டவர்கள் இந்த ஒரு பதிவை தாங்கி கொள்ள மாட்டார்களா என்று ஒரு தைரியத்தில் தான் இந்த பதிவை இடுகிறேன்.

சில சமயம் வேண்டா வெறுப்பாக எழுதிய பதிவெல்லாம் பிரபலம் ஆகும், மிகவும் உழைத்து தகவல்களை திரட்டி வார்த்தை பிறழாமல் ரசித்து எழுதும் பதிவை ஒருவரும் சீண்ட மாட்டார்கள். சரி இதெல்லாம் பார்த்தால் ஆகுமா நம் ரசனை அவ்வளவுதான், மற்றவரின் ரசனைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றி எழுத இதெல்லாம் தானே உதவும் என்று தேற்றிக் கொண்டு அடுத்த பதிவை எழுத தொடங்கி விடுவேன்.

சரி சொல்ல மறந்து விட்டேனே இது எனது 143 வது பதிவு என்று பிளாக்கர் சொல்கிறது. நூறுக்கு அடுத்து எல்லோருக்கும் பிடிச்ச நெம்பர் இது தானே அதான் இந்த பதிவின் போது இதை உளறிக் கொட்டுகிறேன்.

வலைப்பூ தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டு ஆனாலும் நான் பதிவிடுவது என்னவோ கடந்த ஐம்பது நாட்களாய் தான், அதற்கு எனக்கு வாய்ப்பு வசதிகளை Project Leave என்ற பெயரில் வழங்கிய கல்லூரிக்கு நன்றி. கடைசி செமஸ்டர் என்பதால் அதிகம் படிக்கவும் இல்லை, தேர்வுகளும் எண்ணிக்கையில் மூன்றோடு முடிந்து விட்டன. (இன்ஜினியரிங் படிச்சாலும் அரியர் எல்லாத்தையும் தூக்கிட்டோம்ல). அப்புறம் என்ன வேலை எதுவம் இல்லாத காரணத்தினால் உங்களுக்கு அதிகமாய் இம்சை கொடுக்க ஆரம்பித்து இதோ நூறை தாண்டி நிற்கிறேன்.

இது நாள் வரை என்னை பாராட்டியவர்கள் அனைவருக்கும் நன்றி, இதற்கு பிறகு என்னை திட்டுபவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

என் தளத்தை பின்தொடரும் நெஞ்சங்களுக்கும்,
முகநூலில் விரும்பும் நண்பர்களுக்கும்,
இன்ட்லி,தமிழ்10,உலவு என்று
    திரட்டிகளில் வாக்களித்த உள்ளங்களுக்கும்(தமிழ்மணம் தான் சதி செய்கிறதே),
என் பதிவில் மறு மொழி அளித்து ஊக்கப்படுத்திய
சென்னை பித்தன்
தமிழ்வாசி – Prakash
Mahan.Thamesh
சி.பி.செந்தில்குமார்
Ramani
போளூர் தயாநிதி
விக்கி உலகம் 
அருள்
சிநேகிதி
!* வேடந்தாங்கல் – கருன் *!
A.R.RAJAGOPALAN 
 ! ♥ பனித்துளி சங்கர் ♥ !
ரஞ்சனா
அப்புறம் நம்ம பின்னூட்ட கிங் “நாஞ்சில் மனோ”
மற்றும் என்னைப் படித்த படிக்கப் போகிற எல்லோருக்கும் நன்றி..நன்றி

வழமையா நூறாவது பதிவுன்னா எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் பாராமால் மனதிற் பட்டதை கொட்டி இருக்கிறேன். நமக்கு வருவதை தானே நம்மால் செய்ய முடியும்.

இதற்கு பிறகும் என் மேல் எவருக்கேனும் கோபம் இருக்குமேயானால் என்னை மனதில் கொண்டு ஓங்கி ஒரு குத்தாக,
ஓட்டுப் பட்டையில் குத்தி தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளவும்.

0 Shares:
10 comments
  1. மிகவும் சரளமான நடையில்
    வந்து விழுந்த உண்மையான
    வார்த்தைகளின் வலிமை
    அபாரம்
    வாழ்த்துக்கள்

  2. மேலும் பல பயனுள்ள தகவல்களை தந்த வழிகாட்டியாக இருக்க வாழ்த்துகிறேன். வளர்க உங்கள் பணி.

Leave a Reply
You May Also Like
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

பிளாக்கர் சிதைக்கப்பட்டதா?

பதிவர்கள் அனைவரும் இன்று பிளாக்கர் தளம் மீது கடுப்பாகி இருப்பார்கள். இருக்காதா பின்ன? சும்மா எதைப் பற்றியாவது பதிவு எழுதும் நமக்கு, தமிழின துரோகிகள்…
Read More

பிளாக்கர் ஐகானை மாற்றுவது எப்படி?

உங்கள் ப்ளாக்கினை திறக்கும் போது எப்போதும் கீழ்காணும் ஐகானை மட்டும் காண்கிறீர்கள் என்றால், அதனை மாற்றி உங்கள் விருப்பத்திற்கு வைத்து கொள்ளுதல் மிகவும் எளிது.…