மொழிசார்ந்த மாநாடுகளுக்கான தேவை முன்னெப்போதையும் விட, தற்போதுஅதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கி வருவதாக, உலகமய ஆதரவாளர்கள் உரத்துக்கூவிவரும் தற்போதைய தருணத்தில், அழுத்தமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதேசிய இனங்கள், தங்களது அடையாளத்தையும், இருப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்கு, இத்தகைய முன்னெடுப்புகள் அவசியமாகிறது.
வல்லாண்மை நாடுகள் தங்களின், பொருளாதார பண்பாட்டு உத்தேசங்களை, உலகின்பொதுமைப் போக்காக மாற்றத்துடிக்கும் வரலாற்று உன்மத்தத்தை, எதிர் கொள்ளவேண்டிய நெருக்கடி, அனைத்து தொல்லினங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.அதிலும், மொழியாலும், பண்பாட்டாலும் ஈராயிரம் ஆண்டுகால பழமையைக் கொண்ட தமிழினம், இன்று உலகம் முழுவதும் குறிவைத்துத் தாக்கப்படும் இனமாக அல்லல்பட்டு வருகிறது.

இத்தகைய பின்னணியில், கோவையில் வரும் 23ம் தேதி முதல், 27ம் தேதிவரைநடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முக்கியத்துவம் பெருகிறது.நவீன உலகில், மொழி என்பது வெறும் ஊடக கருவி என்ற இடத்தில் இருந்து,வேறுபட்ட பரிமாணங்களை அடைந்துள்ளது. பண்பாட்டு, கலாச்சார அடையாளமாகவும், அரசியலை வென்றெடுக்கப் பயன்படும், அறிவாயுதமாகவும், அதன் பயன்பாடுவளர்ந்துள்ளது.

உலகெங்கிலும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் போராட்டத்திற்கான வீரியத்தை சூல் கொள்ளும் கருவறையாகவும், மொழியின் செயல்பாடு பரிணமித்துள்ளது. கீழை நாடுகளில், மொழி சார்ந்த கவனமும், ஆய்வு ரீதியான தகவமைப்பு பணிகளும், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத்தான் நடந்து வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, 1784ம் ஆண்டில் கொல்கத்தாவில் ஆசிய மொழிகளுக்கானஆய்வு மையம் தொடங்கப்பட்டது.

இதன் பின்னர் 19ம் நூற்றாண்டின் இறுதிவரையில் நடைபெற்ற மொழி சார்ந்த ஆய்வில், வட மொழியான சமஸ்கிருதத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது.ஹரப்பா, மொஹஞ்சதாரோ அகழ்வாய்வுகள் மூலம் அறியவந்த சிந்து சமவெளி நாகரிகம், கால்டுவெல் போன்ற அறிஞர்களால் நிறுவப்பட்ட திராவிட மொழிக்குடும்பத்தின் தொன்மை போன்றவற்றால், தமிழின் பக்கம், உலக அறிஞர்களின் கவனம் திரும்பியது.

இதன் தொடர்ச்சியாக, 1933ம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற கீழ்த்திசை மொழிகள் மாநாட்டின் பின்னர், தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகளுக்கு, இடமளிக்கப்பட்டது. 1964ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கீழ்த்திசை மொழிகள் மாநாட்டின் போது, ஈழத்து தமிழறிஞர் தனிநாயக அடிகளும், வ.அய். சுப்பிரமணியமும் தமிழுக்கென தனி ஆய்வு மையம் தொடங்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தனர்.

இவர்களின் முயற்சியில், அதே ஆண்டு தமிழ் ஆய்வுக் கழகம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில், 1966ம் ஆண்டு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில், சோவியத் நாட்டு அறிஞர்கள் பங்கேற்க மறுப்புத் தெரிவிக்கப்பட்ட வேதனை தரத்தக்க நிகழ்வும் நடந்தது. இதனுடன் சேர்த்து இதுவரை எட்டு உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன.

முதல் மாநாடு- 1966- கோலாலம்பூர் (மலேசியா)

இரண்டாவது மாநாடு-1968 -சென்னை (இந்தியா)

மூன்றாவது மாநாடு-1970-பாரிஸ்( பிரான்ஸ்)

நான்காவது மாநாடு- 1974 – யாழ்ப்பாணம் (1974)

ஐந்தாவது மாநாடு- 1981- மதுரை (இந்தியா)

ஆறாவது மாநாடு-1987-கோலாலம்பூர்(மலேசியா)

ஏழாவது மாநாடு -1989 – மொரீசியஸ்

எட்டாவது மாநாடு- 1995-தஞ்சாவூர்(இந்தியா)

இவற்றில், 1968ம் ஆண்டில், அண்ணாவின் தலைமையில் நடைபெற்ற இரண்டாவதுமாநாடு ஓர் இனிய நினைவு என்றால், 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த மாநாட்டிற்குள், சிங்களவர்கள் புகுந்து, 9 தமிழர்களை சுட்டுக் கொன்ற கொடூர சம்பவம், தீராத வலிதரும் வரலாற்று வடு.

1974, 1987, 1989 ம் ஆண்டுகள் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் முன்வைக்கப்பட்ட ஆய்வுகள், இதுவரை வெளியிடப்படவில்லை என்பது இன்னொரு குறை. 1995ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டிற்கு வருகைதந்த ஈழத்தமிழறிஞர்கள், விமான நிலையத்துடன் திருப்பி அனுப்பப்பட்ட சிறுமைத்தனம், தமிழகத் தமிழர்களுக்கு தீராத அவமானத்தை தேடித்தந்தது என்பதையும் மறந்து விட முடியாது.

இந்த மாநாட்டு ஆய்வுகளை வெளியிட தற்போதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. ஏற்கனவே நடைபெற்ற எட்டு உலகத் தமிழ் மாநாடுகளின் இத்தகைய வரலாறு, தற்போதைய செம்மொழி மாநாட்டை செம்மையுடன் நடத்த உதவும் என்றே நம்புவோம். இந்த மாநாடு, இதுவரையில் நடந்து முடிந்துள்ள எட்டு உலகத் தமிழ் மாநாடுகளின் பட்டியலில் இடம் பெறாத நிலையில், முதல் உலகத் தமிழ் செம்மொழி மாநாடாக கருதப்படுகிறது.

தமிழின் செம்மொழித் தகுதிக்கான அங்கீகாரம் கிடைத்த பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால், இத்தகைய அடைமொழி இந்த மாநாட்டிற்கு வாய்த்துள்ளது. வழக்கமாக, உலகத் தமிழ் ஆய்வு நிறுவனம்தான், உலகத் தமிழ் மாநாட்டுக்கான அறிவிப்பினை வெளியிடும். இந்த மாநாட்டை 2011ம் ஆண்டு நடத்தலாம் என்று அந்த அமைப்பின் தலைவரும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தமிழறிஞருமான நெபுரு க்ரோஷிமா தமிழக அரசிடம் கூறியுள்ளார். எனினும், சட்டப்பேரவை தேர்தல் காலமாக இருப்பதால், முன்கூட்டியே மாநாட்டை நடத்த தமிழ அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, அந்த அமைப்பு விலகிக்கொண்டது.

உலகத் தமிழ் மாநாட்டின் பட்டியலில் இந்த மாநாடு இடம்பெறவில்லை எனினும், இதன் உள்ளடக்க நிகழ்வுகளும், செயல் திட்டங்களும் அவற்றை ஒத்தவையாகவே திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த செம்மொழி மாநாடு குறித்து, பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களும் தமிழகத்தில் எழுந்து வருகின்றன.

அவற்றில் முக்கியமானவை இரண்டு :

ஈழத் தமிழர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இத்தகைய மாநாடு தேவையா?

இத்தகைய மாநாடுகளால் எந்த பயனும் இல்லை. பின்னர் எதற்கு இந்த செம்மொழி மாநாடு?

மேலோட்டமாக பார்த்தால், இந்த இரண்டு கேள்விகளிலுமே நியாயம் இருப்பதைப்போல தோன்றும். எனினும் இவற்றின் அடிப்படையில், செம்மொழி மாநாட்டிற்கான நியாயத்தை நாம் முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. ஈழத் தமிழர்களுக்கு தற்போது நேர்ந்திருப்பது, போராட்ட வழிமுறை தொடர்பான தற்காலிக தோல்வியே.

உரிமைப் போராட்டத்திற்கான நியாயங்கள் இருக்கும் வரை, போராட்டம் வேறு வடிவங்களில் தொடர்வதை தவிர்க்க முடியாது. போர்க்களத்தில், வீரர்களுக்கு சோர்வு ஏற்படும் போது, தளபதிகள் தங்களின் எழுச்சி முழக்கங்களால் அவர்களைத் தட்டி எழுப்பும் காட்சிகளை, புறநானூற்று இலக்கியங்கள் எங்கும் காண முடிகிறதே! அதனைப் போலத்தான் இதுவும்.

அது மட்டுமல்ல. தற்போதைய போராட்டத்திற்கு தக, தங்களை தகவமைத்துக்கொள்வதில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உலகுக்கு உரத்துச் சொல்லும் நிகழ்வாகவும் இதனைப் புரிந்து கொள்ளலாம். ஈழத்தமிழர்களுக்கான அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த விவாதங்களும், வேலைத்திட்டங்களும் உருவாவதற்கான தொடக்கமாகவும் இந்த மாநாடு அமையலாம்.

இரண்டாவது கேள்வி இது போன்ற மாநாடுகளால் என்ன பயன் என்பது.

சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகமும் உருவானது இது போன்ற உலகத் தமிழ்மாநாடுகளின் விளைவாகத்தான். இது போன்ற மாநாடுகளின் மூலமாக வைக்கப்பட்ட ஓயாத கோரிக்கைகளின் மூலமாகத்தான், தமிழின் செம்மொழித் தகுதிக்கு அங்கீகாரம் கிடைத்தது.

1964ம் ஆண்டு தனிநாயக அடிகளார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் சேர்ந்து உருவாக்கிய தமிழ்ஆராய்ச்சிக் கழகத்தின் மூலமாகத்தான், பின்னர் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகள் அனைத்தும் அரங்கேறின. எனவே, சில குறைகள் இருப்பதை கணக்கில் கொண்டு, இத்தகைய மாநாடுகளே தேவையில்லை என்று சொல்லிவிட முடியாது.

எனினும், தமிழ்வழிக்கல்வி, கல்வெட்டுகள் ஆய்வு, தமிழை முழுமையாக கணிணி மயப்படுத்துதல், நவீன படைப்புகள் குறித்த ஆக்கரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இந்த மாநாடு கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலகத் தமிழர்களின் மத்தியில் நிலவி வருகிறது.

கோவை செம்மொழி மாநாட்டில், முகப்பரங்கம், தனிப் பொழிவரங்கம், கலந்துரையரங்கம் , அமர்வரங்கம் போன்ற அரங்குகளில், 70க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் 1,644 பேரும், கட்டுரையாளர்கள் 1,020 பேரும் பங்கேற்கின்றனர் . இதுவரையில் நடைபெற்ற மாநாடுகளில், இந்த அளவு எண்ணிக்கையில், வெளிநாட்டு ஆய்வாளர்கள் பங்கேற்றதில்லை.

சங்க இலக்கியத்தின், இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுடன், தலித்தியம், பெண்ணியம் உள்ளிட்ட தற்கால இலக்கியப் போக்குகளையும் உள்ளடக்கிய ஆய்வு அரங்குகளும் இந்த மாநாட்டில் இடம்பெற உள்ளன. தமிழ் இனம், கடும் இழப்புகளைச் சந்தித்துள்ள தருணத்தில் நடைபெறும் இந்த மாநாடு, வெறும் விளம்பர களியாட்டமாக முடிந்து விடக்கூடாது என்ற பதைப்பு, உலகத்தமிழர்கள் அனைவருக்கும் இருப்பதில் வியப்பில்லை.

தமிழர்களின் 2 நூற்றாண்டு அரசியலை உள்வாங்கிய கலைஞர் கருணாநிதியின் தலைமையில் நடைபெறும் இந்த செம்மொழி மாநாடு, செய்யப்போவது என்ன என்பது குறித்த எதிர்பார்ப்புடன், தமிழ் உலகம் காத்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் மாநாடாக, கோவையில் நடைபெற உள்ள முதல் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் ஆகும்.

நன்றி: மேனா. உலகநாதன்

——————————————————-

தமிழ்ச் செம்மொழி

——————————————————-

உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் tamil-name3மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது. 1816இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றுள் தமிழ்மொழியின் தொன்மையினையும் வடமொழியினின்றும் தனித்து இயங்குதற்குரிய ஆற்றலையும் உலகறிய நிலைநாட்டினார். இவர் நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித்தளத்தில்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தமிழ்த்தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற்கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதிய “தமிழ் மொழியின் வரலாறு” எனும் நூலில் தமிழ்மொழி உயர்தனிச்செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தியதும் அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். இவ்வியக்கத்தினைத் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பலரும் பேணி வளர்த்தனர். உலகின் முதல் செம்மொழி தமிழ் என்ற கருத்தினைப் பாவாணர் The Primary Classical Language of the World என்ற தம் நூலில் விளக்கியுள்ளார்.
கால்டுவெல் காலத்திற்கு முன்பே, வடமொழியிலும் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ்மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள், கி.பி 18 ஆம் நூற்றாண்டினராகிய மாதவச் சிவஞான முனிவர் முதலில் சுட்டத்தக்கவர். இச்சான்றோர் தொல்காப்பியப் பாயிரவிருத்தியில், “தமிழ்மொழி புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா” என்று எழுதியிருத்தல் எண்ணத்தக்கது.
தமிழ் மொழியையும் வடமொழியையும் ஒப்பிட்டு முறையாக ஆராய்ந்த முதலறிஞராகச் சிவஞான முனிவர் கருதுதற்கு உரியர்.
பன்மொழிப் புலமைமிக்க, புகழ்பெற்ற தமிழியல் அறிஞர்கள் பலரும் செவ்வியல் மொழிக்குரிய தகுதிகள் யாவும் தமிழ்மொழியில் நிரம்பப் பெற்றுள்ள நிலையினைத் தம் ஆய்வுநூல்களில் நிலைநாட்டியுள்ளனர்.
“இருபத்தாறாயிரத்து முந்நூற்று ஐம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம், சிறந்த உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது. தனித்தியங்கும் ஆற்றலையும், தமிழ்மண்வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும், யாப்பியல், பாவியல், அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது.
tamil-nameசங்கச் செய்யுள் என்பது மொழியியல், யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில், சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும்” எனக் கமில் சுவலபில் குறிப்பிடுகிறார்.
உலகப்புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஏ . கே . இராமாநுசன் மேலே கூறப்பெற்ற கருத்தினை வழிமொழிவதுடன், இந்தியச் செம்மொழிகள் இரண்டினில் வடமொழி வழக்கில் இல்லை என்றும் தமிழ்மொழி தொன்றுதொட்டு வழங்கிவரும் சிறப்புக்குரியது என்றும் கூறியுள்ளார்.
மேலே கூறப்பெற்ற மொழிவல்லுநர்களின் கருத்துகள் ஒருபுறமாக, வரலாற்றறிஞர்களும் புதைபொருளாய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என்றும், தொல்பழந்தமிழர் நாகரிகம் என்றும், அங்கு வாழ்ந்தோர் பேசிய மொழி செம்மொழித்தமிழின் மூலமொழி என்றும் நிலைநாட்டியுள்ளனர். திராவிடமொழிகளிலும் வல்ல மேலைநாட்டு வடமொழிப் பேராசிரியர்கள் டி. பர்ரோ, எம். பி. எமனோ உள்ளிட்டோர் வடமொழி வேதங்களில் காணப்படும் எண்ணற்ற தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். பாணினியின் அட்டாத்தியாயி என்னும் வடமொழியின் மூல இலக்கண நூலுக்குப் பேருரை கண்ட காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் தமிழ் தொடர்பான தம் அறிவினைப் புலப்படுத்தியுள்ளனர். கிரேக்கம், ஈபுரு, சீனம், சப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட உலக மொழிகளில் காணப்படும் பற்பல தமிழ்ச் சொற்களைத் துறைவல்ல அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். மேலை, கீழை நாடுகளுடனும் தமிழ்மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத்தொடர்புகளை நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சிஅறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர்.
எனவே, செம்மொழித்தமிழின் சிறப்பும் உலகமக்களுடன் தமிழர் கொண்டிருந்த தொடர்பும் தெள்ளிதிற் புலனாகும்.
அறிஞர் பெருமக்களும் மொழிவல்லுநர்களும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகவே தமிழ் செம்மொழி என்ற கருத்தினைத் தளராது வலியுறுத்திக் கூறி வந்திருப்பினும், மாண்புமிகு தமிழக முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மேற்கொண்ட மதிநுட்பத்துடன் கூடிய விடாமுயற்சியின் விளைவாக இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டு 12.10.2004 இல் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்நன்னாள் தமிழர் வரலாற்றில் ஒரு பொன்னாள் ஆகும்.

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம், அதனால் வ௫ம் பலன்கள்.

*விபூதி* எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது? கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும்…
Read More

மார்பிங்  – தப்பிக்க முடியுமா?

​# மார்பிங் ” என்றால் என்ன? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் #மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும்…
Read More

தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான்

தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்…. பகிருங்கள் நண்பர்களே நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்……………. பதாகைக்கு…
Read More

எளிமைக்கு மறுபெயர் கக்கன் – இப்படி ஒருத்தர் இனி வர வாய்ப்பே இல்லை

1980-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு   அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம்…
Read More

அடிக்காதீங்க வாத்தியாரே

​யோவ்…… யார்யா நீயி…. இந்த தென்னமரத்தைப் போய் குச்சியால அடிச்சிக்கிட்ருக்க……… பின்ன என்ன சார்…..  போனவருசம் 60 தேங்கா கொடுத்துகிட்ருந்துச்சு.. இப்போ என்னடான்ன 30…