மேல்சபை தமிழக மக்களுக்கா? தன் மக்களுக்கா?

கடந்த சில நாட்களுக்கு முன் சட்டசபையில் பேசிய திமுக உறுப்பினர் அனிதா ராமகிருஷ்ணன், “மேல்சபை மீண்டும் கொண்டுவரப் படவேண்டும்” என்றொரு கோரிக்கையை முன்வைத்தார். அதற்குப் பதில் அளித்துப் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, “தமிழகத்தில் மீண்டும் மேல்சபை கொண்டுவரப் படும்” என்று தெரிவித்தார்.
மேலும், “மேல்சபை இருந்தால் கூச்சல், குழப்பம் இல்லாத ஒரு அவையாக இருக்கும்” என்றும் “பெரும் அறிஞர் பெருமக்களைச் சந்தித்து உள்ள மேல்சபை, சட்டப்பேரவையில் ஏற்படுகிற சூட்டைத் தணிக்கும் வகையில் செயல்படும்” என்று மேல்சபை கொண்டுவரப் பட சில நியாயமான(!? ) காரணங்களையும் கூறினார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மீண்டும் மேல்சபை கொண்டுவருவதற்க்கான தீர்மானத்தை திமுக அரசு தாக்கல் செய்தது. தீர்மானத்தை ஆதரித்து 155 உறுப்பினர்களும் எதிர்த்து 61 உறுப்பினர்களும் வாக்களித்தனர். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாமக தீர்மானத்துக்கு ஆதரவாகவும் அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்டு கம்ப்யூனிஸ்ட் கட்சிகள் எதிராகவும் வாக்களித்தன. இடது கம்ப்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பே செய்தனர்.

மீண்டும் மேல்சபை கொண்டு வருவது குறித்து இடது கம்ப்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம் கருத்து கூறுகையில், “தமிழ்நாட்டில் மீண்டும் மேல்சபை கொண்டு வருவது தேவையற்ற ஒரு வீண் செலவே தவிர, இதனால் மின்சாரத் தட்டுப்பாடோ விலைவாசி பிரச்னையோ தீரப் போவதில்லை” என்றார்.

அதுபோலவே தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி, “மின்சாரப் பற்றாக் குறை மற்றும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் இவ்வேளையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட என்ன தேவை எழுந்தது என்பதை இந்த அரசு விளக்க வேண்டும்” என்றும் “கடன் சுமை அதிகரித்துள்ள சூழ்நிலையில் மேலவை அமைக்கப்பட்டால் கூடுதல் செலவுதான் ஆகும்” என்று தெரிவித்தார்.

“வீண் செலவு” என்ற விமர்சனத்துக்குக் கருணாநிதி பதிலளிக்கும் போது, மேலவைக்கு 1985-86ல் ஆன செலவு 13 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்தான். அப்போது மேலவைச் செயலகத்தின் செலவு 18 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்தான். இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் செலவு கொஞ்சம் அதிகமாக ஆகலாமே தவிர வேறல்ல” என்று பதிலளித்தார்.

அதே போன்று, அதிகரித்துள்ள “கடன் சுமை” குறித்து எழுந்த விமர்சனத்துக்கும் அமைச்சர் அன்பழகன், மற்ற மாநிலங்களின் கடன் சுமை மற்றும் இந்திய அளவில் தனிநபர் கடன் சுமையைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தின் கடன் சுமை அதை விட அதிகமல்ல என்று விளக்கமளித்தார்.

மேலவையால் விளையும் நன்மையையும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ள புள்ளி விவர கணக்குகளையும் அலசும் முன், தமிழகத்தின் மேல்சபை வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்ப்போம்.

இந்தியாவில் ஆங்கிலேயன் தன் நாட்டில் உள்ளதைப்போல் அறிமுகப் படுத்தி, செல்லும் போது விட்டுச் சென்ற எச்சங்களில் ஒன்று தான் இந்த மேலவை.  மேலவை, மக்களை நேரடியாகத் தேர்தல் மூலம் சந்திக்காமல் சிலரை அமைச்சர்களாக வலம்வர வழிவகுத்தது.

சான்றுக்கு,

* தேர்தலில் போட்டியிடாமல் மேலவை உறுப்பினராக ஆளுநரால் நியமிக்கப் பட்ட ராஜாஜி  தமிழகத்தின் முதலமைச்சரானார்.

* இதே போல 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. 233 தொகுதிகளில் போட்டியிட்டு 138 இடங்களைக் கைப்பற்றியது. இதை எதிர்பாராமல், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அண்ணாத்துரை, மேலவை வழியாகத் தமிழகத்தின் முதல்வரானர்.

* எம்.ஜி.ஆர். , எஸ் எஸ் ஆர் போன்ற நடிகர்கள், நாகூர் ஹனீஃபா போன்ற கட்சிப் பாடகர்கள் மேலவையில் உறுப்பினராக இருந்துள்ளனர்.

* 1984-ம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்காக எம்.எல்.ஏ. பதவியைத் துறந்த கருணாநிதி, அன்பழகன் இருவரும் மேலவையில் உறுப்பினர்களாகப் பொறுப்பு ஏற்றனர்.

* ம.பொ.சிவஞானம், குன்றக்குடி அடிகளார் போன்ற கருணாநிதியின் ஆதரவாளார்கள் மேல்சபையில் உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் இருந்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் மேலவைக்கு ஏராளமான புதுமுகங்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆரம்பகாலங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர் பிரதிநிதிகள், பட்டதாரிகளின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு துறையினரும் பங்கு பெறும் வகையில் மேலவையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். காலப்போக்கில், தங்களுக்கு வேண்டியவர்களையும் கட்சியில் தங்களுக்குத் தலைவேதனை தரும் தவிர்க்க முடியாதவர்களையும் நுழைத்து அதன் மதிப்பை அரசியல்வாதிகள் கெடுத்தனர்.

இந்நிலையில், ஜனதாக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தப் போது, அதனால் ஏற்படும் மக்கள் பண விரயத்தையும் மேலவையை அரசியல்வாதிகள் தங்களின் கட்சி நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதையும் காரணம் காட்டி பல மாநிலங்களில் மேலவைகளை ஒழித்தது. “மேலவைகள் மக்கள் பணத்தை மறைமுகமாக விழுங்கும் வெள்ளை யானை” என்று ஜனதா கட்சியினர் வர்ணித்தனர்.

எனினும் தமிழ்நாட்டில் மட்டும் மேலவை அகற்றப்படாமல் எந்தச் சிக்கலும் இன்றி தொடர்ந்து செயல்பட்டது.  மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்(எம்.ஜி.ஆர்) அவர்களின் ஆட்சியின் போது, ஒரு வழக்கில் சிக்கி திவால் நோட்டீஸ் கொடுத்திருந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை மேலவை உறுப்பினராக்க முயற்சி நடந்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

அத்துடன் கருணாநிதி மீண்டும் மேலவைக்குள் நுழையும் வாய்ப்பு உருவானது. இதை விரும்பாத எம் ஜி ஆர் 1986 நவம்பர் மாதம் தமிழகத்தில் மேலவையை அகற்றினார்.

தற்போது நாடகமான முறையில், திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் “மேலவை மீண்டும் வேண்டும்” எனக் கோரிக்கை வைக்க, அதற்குப் பதிலளிக்கும் போது, “இதோ உடனே கொண்டு வந்து விடலாம்” என அறிவித்து, அடுத்தச் சில நாட்களில் எல்லா எதிர்ப்பையும் மீறி மேலவைக்கான தீர்மானத்தையும் திமுக அரசு நிறைவேற்றி விட்ட செயல், மேலவை வேண்டாம் என்பதற்குக் கூறப்படும் அனைத்து காரணங்களையும் நீக்கி வைத்துப் பார்த்தால் கூட, ஏதோ காரணங்களுக்காக மேலவையைக் கொண்டு வந்து விடவேண்டும் என்று முன்னரே திமுக தீர்மானித்தே செயல்பட்டுள்ளது என்ற சந்தேகத்தை வலுவாக விதைக்கிறது.

ஆட்சிக் கட்டிலில் ஏறி நான்கு  வருடம் அறிஞர் பெருமக்களையும், படித்த பட்டதாரிகளையும் மறந்து விட்ட தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, தன் குடும்பத்தில் நடக்கும் வாரிசு உரிமைப் போர் உச்ச கட்ட நிலைக்கு வந்துள்ள இக்காலகட்டத்தில் திடீரென அறிஞர் பெருமக்கள், படித்த பட்டதாரிகள் ஞாபகம் வந்ததுதான் பெருத்த ஆச்சர்யத்தை வரவழைக்கிறது.

மேலவையில் அறிஞர்களும் மேதைகளும் இருப்பர் என்பதும் மேல்சபை இருந்தால் கூச்சல், குழப்பம் இல்லாத ஒரு அவையாக இருக்கும் என்றும் பெரும் அறிஞர் பெருமக்களைச் சந்தித்து உள்ள மேல்சபை சட்டப்பேரவையில் ஏற்படுகிற சூட்டை தணிக்கும் வகையில் செயல்படும் என்றும் முதல்வர் கருணாநிதி சொல்வது கடந்த காலத்தைத் திரைபோட்டு மறைக்கும் அயோக்கியத்தனமாகும்.

உண்மையிலேயே அறிஞர் பெருமக்கள், படித்த பட்டதாரிகள் போன்றோர்களுக்கு வாய்ப்பளித்து அவர்கள் மூலம் தமிழக மக்கள் மேம்பாட்டுக்குத் தான் தமிழக முதல்வர் திட்டமிடுகிறார் எனில், கிரிமினல்கள், ஊழல் பேர்வழிகள், சாராய தாதாக்கள், ரவுடிகள் போன்றோருக்குத் தன் கட்சியில் வழங்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்புகளில் ஒரு பாதியையாவது அறிஞர் பெருமக்கள் மற்றும் படித்த பட்டதாரிகளுக்கு வழங்கலாமே?

தங்களுக்கு விருப்பப்பட்டவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்கும் ஷோகேசாகவும் வெறுமனே மக்கள் பணம் விரயமாகும் கூடாரமாகவும் ஆகிவிட்ட அனுபவம் தமிழகத்துக்கு ஏற்கெனவே இருக்க, மேல்சபை இப்போது நடைபெறும் சட்டசபை போல் அல்லாமல் அமைதியாக நடைபெறும் என்றும் அங்கு அறிஞர் பெருமக்களும் படித்தப் பட்டதாரிகளும் தான் உறுப்பினராக இருப்பர் என்றும் தமிழக முதல்வர் கருணாநிதி மக்களிடம் பூச்சுற்றுவதாகவே எண்ணத்தோன்றுகிறது.

மேலும் மேல்சபையை மீண்டும் கொண்டுவருவது அமைச்சரவையில் பங்கு கேட்டு அவ்வப்போது குரல் எழுப்பி வரும் காங்கிரஸ் கட்சிக்குத் தீனி போட திமுகவுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். தேர்தல் கூட்டணி பேரம் பேசவும் இது உதவும் என்பதில் ஐயமில்லை. இருக்கும் 233 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு போட்டது போக கடைசியில் மிஞ்சுவதில் வெற்றிபெற்று வந்தால் மெஜாரிட்டி கூட தேறாத நிலையில் பதவிகளைப் பங்கு போடவும் மேல்சபை உதவலாம்.

அத்தோடு, ககருணாநிதியின் ஆதரவாளர்களான கவிக்கோ அப்துல் ரஹ்மான், ரஜினி, கமல், வைரமுத்து, பாக்கியராஜ் போன்றோர் மேலவை உறுப்பினராகும் வாய்ப்பும் உள்ளது. அவ்வளவு ஏன், அவரின் குடும்பத்தினராக அவர் பெருமிதப்படும் திரையுலகைச் சேர்ந்த ஷ்ரேயா, ரம்பா போன்றோர் கூட மேலவை உறுப்பினரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

தற்போது தமிழ்நாடு அரசு இருக்கும் தள்ளாடும் கடன்சுமையில், சுமார் ரூ 425 கோடி மக்கள் பணத்தைச் செலவழித்து புதிய சட்டப்பேரவை கட்டப்பட்டுள்ளது. அதனைப் பராமரிப்பதற்காக ஆண்டு தோறும் ஆகப்போகும் செலவு அதிகரிக்கப் போவது உறுதி. இந்நிலையில், மேலும் பல கோடிகள் இந்த மேலவையின் செலவுக்காகவும் உறுப்பினர்கள் சம்பளம் இத்யாதிக்காவும் மக்களின் தலையின் மீது விழப்போகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே, ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் வாடும் ஏழைகள் லட்சக்கணக்கில் நம் நாட்டில் நிறைந்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களின் கடன் சுமையைக் கணக்கிட்டுக் காட்டி, “அந்த அளவுக்கு நாம் இன்னும் கடன் சுமையில் வரவில்லை. எனவே இன்னும் சில கோடிகளைத் தாராளமாக அரசியல்வாதிகளுக்காக வீசி எறியலாம்” என கணக்குக் கூறும் அரசியல்வாதிகளுக்கு அந்தச் சாதாரண மக்களுக்கு இந்த லட்சங்களும் கோடிகளும் இமயமலைக்குச் சமமானது என்பது எங்கே புரியப்போகிறது!

தள்ளாத கடன் சுமையில் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், மக்களின் வரிப்பணத்தில் வேண்டப்பட்டவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்கும் இடம் தான் மேலவை என்பது, கடந்த கால அனுபவத்தின் மூலம் இந்நாட்டு மக்கள் நன்றாக அறிந்திருக்கும் நிலையிலும் திடீரென தன் கட்சி எம்.எல்.ஏவைப் பயன்படுத்தி அப்படியொரு கோரிக்கையை வைத்து, இவ்வளவு அவசரம் அவசரமாக மேலவைக் கொண்டு வந்துள்ளதன் பின்னணியில், மத்திய அரசியலிலிருந்து மாநில அரசியலுக்கு வந்து ஏற்கெனவே ஸ்டாலினுக்கு உறுதிபடுத்தப்பட்டு விட்ட கட்சி தலைமை பதவியில் பிரச்சனையைத் தோற்றுவிக்க தயாராகியிருக்கும் மற்றொரு மகனான அழகிரிக்கு மகுடம் ஒன்றை நிரந்தரமாக வைத்து குடும்பப் பிரச்சனையைச் சுமூகமாக தீர்க்கும் திட்டம் ஒன்று கருணாநிதிக்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுவதையும் புறம் தள்ளி விடமுடியாது.

தேர்தல் அரசியலில் இல்லாதவர்களும் கூட மேலவை உறுப்பினராக வாய்ப்புகள் இருப்பதால், படித்தவர்களும் சமூக ஆர்வலர்களும் மேலவை உறுப்பினராவதற்கு வழி ஏற்படுவது என்னமோ உண்மை தான். ஆனால், அது நடக்க வேண்டுமே? கண்துடைப்பிற்காக ஏதோ பெயருக்கு ஒரு சில படித்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு தமிழக மக்களின் தலையில் மற்றொரு மிளகாய் அரைக்கப்படப் போவது தான் நடக்கப்போகிறது!

அதல்லாமல், புதிதாக தேர்ந்தெடுக்கப் படும் 63 மேல்சபை உறுப்பினர்கள் வந்து இப்போதிருக்கும் சட்டமன்ற,நாடாளுமன்ற  உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளால் நிறைவேற்ற முடியாத திட்டங்களையோ, காரியங்களையோ தமிழகத்தில் நிறைவேற்றி விடப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

உலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்? சென்னை ஐகோர்ட் வேதனை

சென்னை:’மொழிக்கு எந்த பயனும் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து, உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பிரயோஜனம்; தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல்,…
Read More

என்ன இனிமே தான் கத்திரி வெயிலா?

அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் வியாழக்கிழமை (மே 5) தொடங்கவுள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேற்கு திசையில்…
Read More

இது நம்ம ஆளு

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. குறளரசன் இசையமைத்து வரும்…
Read More

ஓலா விளம்பரத்தில் நரேந்திர மோடி

முதலில் கீழ்காணும் வீடியோவை பாருங்கள். சச்சின் என்ன செய்கிறார், பிஎம்டபிள்யூ காரை ஒரு சிறிய பயணம் செய்து அறிமுகம் செய்து வைக்கிறார். இதை நாம்…
Read More

சித்திரை மாதத்தின் சிறப்பு

    இராசிச் சக்கரத்தில் மேட ராசியில்  சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம்…