புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளலாமா?

7
203
இணைய உலகில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்த,
மிகப் பெரும்பான்மையானோர் தளத்தின் ஊடே இணைந்து பயன்படுத்தும் தளம் முகநூல்.
அதன் தோற்றம் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இருக்கின்றன.
மார்க் ஜூக்கர்பெர்க் தன் நண்பரை ஏமாற்றினார், மற்றவரது திறமையை திருடினார் என்று பல கதைகள் இருக்கின்றன அதில் சில கதைகள் நிஜமாகவும் இருக்கலாம்.

ஆனால் முகநூலின் வளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட இருவர் மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகிள் தாத்தா. அதிலும் குறிப்பாக இணைய உலகையே தன் கைக்குள் அடக்கி ஆள நினைத்த கூகிள் முகநூலின் வருகைக்கு பின் பெரிய அளவில் வளர்ச்சி அடைய முடியாமல் தவித்து வருகிறது.
இன்றைக்கு இணையத்தின் எந்த பக்கத்தை திறந்தாலும் அது ஏதோ ஓர் வகையில் முகநூலுடன் இணைந்து இருக்கிறது.

இப்படியே போனால் மைக்ரோசாப்ட்டை நம்ம காலி பண்ணின மாதிரி முகநூல்காரன் நம்மள காலி பண்ணிடுவானோ என்ற எண்ணம் கூகிள் தாத்தாவிற்கு தோன்றவே அச்சு பிறழாமல் முகநூலை பிரதி எடுத்து அதில் கொஞ்சம் உப்பு பொடி மிளகா சேர்த்து கூகிள் ப்ளஸ் (Google Plus) என்ற பெயரில் தொடங்க போகிறார்கள். கிட்டத்தட்ட நம்ம கோலிவுட்காரர்கள் ஆங்கில படங்களை காப்பி அடிப்பதைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஆனால் இதற்கு முன்பே கூகிள் இதனை எதிர்கொள்ள சில முயற்சிகள் எடுத்தது ஆனால் எல்லாமே பிளாப் ஆகி விட்டன. கூகிள் பஸ் (Buzz) , ஓர்குட் (Orkut) என்று கலர் கலராக  ரீல் சுற்றி எதுவும் எடுபடாமல் போகவே இப்போது அட்ட காப்பி அடிக்க முடிவெடுத்து விட்டார்கள்.

சமூக இணையதளங்கள் என்றால் முகநூல் மற்றும் ட்விட்டர் தான் என்ற மனநிலையில் இருந்து மக்களை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பதை கூகிள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளது. அதனால் தான் முகநூல் வழங்காத சில சேவைகளை அது அறிமுகம் செய்யப் போகிறது.

அதில் முக்கியமான ஒன்றாக தெரிவது முகம் பார்த்து பேசும் வீடியோ சாட்டிங் முறை..
முகம் தெரியாத நபர்களை முகம் பார்த்து பேச வைக்க எடுக்கும் முயற்சி என்றாலும் இதன் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஆடவர் பெண்டிரை தேடியும், பெண்டிர் ஆடவரை தேடியும் நட்பு விருப்பங்களை தெரிவித்து முகம் பார்த்து பேச ஆரம்பித்தால் என்ன ஆவது,
மொத்த நேரமும் கோவிந்தா தான்…

பொதுவாகவே மக்களுக்கு பிறரது சொந்த விஷயங்களை அறிந்து கொள்வதில் தான் ஆர்வம் அதிகம் அதனை கருத்தில் கொண்டு தான் முகநூல் இன்னமும் குறிப்பிட்ட சிலருடன் தனது நிலையை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்யவில்லை.
இதனை கூகிள் என்னவோ பெரிய வசதி போல நினைத்து அறிமுகம் செய்கிறார்கள்..
பார்ப்போம் எந்த அளவிற்கு மக்கள் கூகிள் ப்ளஸ்சை விரும்புகிறார்கள் என்று..

என்னமோ போங்க.. புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்டா மட்டும் புலி ஆகிட முடியுமா என்ன?

7 கருத்துக்கள்

  1. சகோ.மனோவி,

    பொதுவாக, ஒரு விஷயத்தை எவர் முதலில் செயல்படுத்துகிறாரோ அவரே வெற்றியை தக்கவைக்க அதிக வாய்ப்பு. பின்னால் வருபவர் கடும் பிரயத்தனம் எடுத்து புதுமைகள் புரிந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். அதுவும் போட்டியின்போது முன்னால் இருப்போரின் மந்த நிலை முக்கியம். ஆனால், இங்கே facebook-காரர்கள் அப்படியல்லவே..? ம்ம்ம்… நல்ல போட்டிதான்..! பார்ப்போம்.

  2. இப்போ பாருங்க கூகிள்+ வந்துடிச்சு, பேஸ்புக்க விட பிரபலமும் வளர்ச்சியும் அடைய போகிறது. கூகிள் தான் இணைய உலகின் ஜாம்பவான் என்பதை யாரும் மறுக்க முடியாது, இணைய உலக வளர்ச்சியில் கூகிள் நிறுவனத்தோட பங்கு அதிகம், முகநூல் வெறும் சமூக வலைப்பின்னல் தளம்தானே எல்லாத்துறையிலயும் கால் பதிச்ச கூகுளிடம் அவர்கள் சித்து வேலைக்காகாது. இவ்வளவு ஏன் இப்போ நான் பின்னூட்டம் போடுற ப்ளாக் கூட கூகிள் கொடுத்ததுதான், கூகிளுக்கு நன்றி.

உங்கள் கருத்தை தெரிவிக்க