அத நிப்பாட்டுங்க – தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை

0
151

சொன்னீங்களேஅ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சித்து தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும், ‘சொன்னீங்களே… செஞ்சீங்களா?’ என்ற விளம்பரத்தை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. மனு அளித்துள்ளது.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, பதவியில் உள்ள அ.தி.மு.க. அரசு செய்யவில்லை என குறிப்பிட்டு, தனியார் தொலைக்காட்சிகளில் விதவிதமான விளம்பரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இலவச நிலம் போன்ற வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்ததும் அதையெல்லாம் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை என்ற கோணத்தில் அந்த விளம்பரங்களை தி.மு.க. தயாரித்து, தனது தேர்தல் பிரசார விளம்பரமாக ஒளிபரப்பி வருகிறது.

இந்த விளம்பரங்களில், முதல்வர் ஜெயலலிதாவே அந்த வாக்குறுதிகளைக் கூறுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த விளம்பரங்களை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

அந்த மனுவில், ”இந்த விளம்பரங்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிமீறலாகவும், விளம்பர நியதிகளுக்கு எதிராகவும் இந்த விளம்பரங்கள் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறும்போது, ”சம்பந்தப்பட்ட விளம்பரங்களை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட கண்காணிப்பு குழு அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

உங்கள் கருத்தை தெரிவிக்க