Top Ad unit 728 × 90

புதிது

recent

இளையராஜா ஆயிரம் : சில துளிகள்

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவை கவுரவப்படுத்தும் விதமாக ‘இளையராஜா ஆயிரம்’ என்னும் மாபெரும் இசை நிகழ்ச்சி மற்றும் பாராட்டு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இளையராஜா மியூசிக் அண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமும், விஜய் டிவியும் இணைந்து நடத்தியது.

அவ்விழாவின் சில முக்கிய துளிகள்:

* பின்னணி பாடகிகள் இணைந்து 'குரு பிரம்மா' என்ற பாடலையும், 'ஜனனி ஜனனி' என்ற பாடலையும் நிகழ்ச்சியின் துவக்கமாக பாடினார்கள்.
* இளையராஜா குழுவின் பின்னணி இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 'நாயகன் தீம் மியூசிக்', 'கரகாட்டக்காரன் இசை', 'தளபதி இசை' ஆகியவற்றை வழங்க, ரசிகர்கள் மத்தியில் பலத்த கரவொலி கிடைத்தது.
* கமல் பேசிய வீடியோ தொகுப்பு ஒன்றை திரையிட்டார்கள். அதில் கமல் "ரசிகர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுவது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. பல கோடி ரசிகர்களின் மனதில் கூடியிருக்கும் தலைவன் இளையராஜா. இசை நிகழ்ச்சி தொடங்கட்டும்" என்று பேசி முடித்தவுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
* 'ஹேராம்' படத்தின் 'ராம் ராம்' என்ற பாடல் ஒலிக்க அரங்கினுள் நுழைந்தார் இசையமைப்பாளர் இளையராஜா. மேடையைத் தொட்டு வணங்கி, அவருக்கு இடப்பட்டு இருந்த இருக்கையில் அமரும் முன் ரசிகர்களின் பலத்த கரகோஷத்திற்கு இடையே விழா அரங்கின் இறுதி வரை சென்று வந்தார்.
* இளையராஜா இருக்கையில் அமர்ந்தவுடன், தமிழ்நாட்டில் இளநீர் கடைக்காரர், விவசாயி ஆகியோரில் இருந்து மேல்தட்டு மக்களின் வாழ்க்கையில் இளையராஜாவின் இசையின் பங்கு என்ன என்று விவரிக்கும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை திரையிட்டார்கள்.
* விக்கு விநாயக் ராம், டி.வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இருவரின் நிகழ்ச்சி முடிந்தவுடன் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் "நான் உங்களிடம் இசை எப்படி கற்றுக் கொண்டேன் என்று சொல்லுங்கள்" என்று இளையராஜா கேட்டார். அதற்கு "அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து வந்துவிடுவார் இளையராஜா. தாமதமாகி விடக்கூடாது என்பதற்காக சில சமயங்களில் தலையை துவட்டாமல் கூட வந்துவிடுவார்" என்று குறிப்பிட்டார் டி.வி.கோபாலகிருஷ்ணன்
* " நகத்தில் இருக்கும் அழுக்கு அளவிற்குத் தான் நான் இசையில் கற்றுக் கொண்டுள்ளேன்" என்று டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இளையராஜா கூறினார். அதற்கு "இசை என்பது கடல் போன்றது. அதில் உள்ள ஆழத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என நினைக்கிறீர்கள். இசையுலகின் ஆட்சி புரிந்த ராஜா என் இளையராஜா" என்று குறிப்பிட்டார் டி.வி. கோபாலகிருஷ்ணன்
* கிட்டார் பிரசன்னா வெளிநாட்டு கலைஞர்களுடன் இணைந்து இளையராஜாவின் பாடல்களை இசைத்தார். அப்போது "நான் இந்தளவுக்கு கிட்டார் வாசிப்பது, இளையராஜாவின் பாடல்களில் இருந்த கிட்டார் இசையின் மூலம் வந்த ஈர்ப்பு தான்" என்று தெரிவித்தார்.
* நிகழ்ச்சி தொகுப்பாளராக மேடையேறிய பார்த்திபன், இயக்குநர் பாலாவையும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தையும் மேடைக்கு அழைத்தார். இயக்குநர் பாலாவிடம் "இளையராஜாவிடம் பிடிக்காத விஷயம் எது?" என்று கேள்வி கேட்க "அவரது உண்மையான கோபம்" என்று பதிலளித்தார்.
* இளையராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் "ஒரு காலத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இந்தி இசை ஆக்கிரமித்து இருந்தது. அப்போது நான் புதிதாக இசையமைப்பாளர் ஒருவரை தேடி வந்தேன். அப்போது கிடைத்தவர் தான் இளையராஜா. இவருடைய பாடல்களை எல்லாம் கேட்டு, அதற்காக நான் எழுதிய கதை தான் 'அன்னக்கிளி'. இந்தி இசையை தமிழகத்தில் இருந்து ஒடவைத்தவர் இளையராஜா தான். அப்படத்தின் வெற்றிவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது மாட்டு வண்டியில் வந்து பெரும் கூட்டம் இவருடைய நிகழ்ச்சியைக் கண்டு களித்தார்கள்" என்று தெரிவித்தார்.
* இளையராஜாவுடன் பணியாற்றிய இயக்குநர் பால்கி, மிஷ்கின், பி.வாசு, பாக்யராஜ், பிரகாஷ்ராஜ் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். பாக்யராஜ் மேடைக்கு வரும் போது 'சின்ன வீடு' படத்தின் இளையராஜா இசை ஒலிக்கவே அரங்கில் சிரிப்பொலி பரவியது.
* "'சின்ன தம்பி' படத்தில் குஷ்புவின் தாலி தெரியும் முக்கியமான காட்சியில் பின்னணி இசை இல்லாமல் விட்டுவிட்டார். நான் கேட்ட போது இயக்குவது உன் வேலை, இசையமைப்பது என் வேலை என்று தெரிவித்துவிட்டார். படம் வெளியாகி தியேட்டரில் நான் பார்க்கும் போது அக்காட்சிக்கு அனைவரும் உச்சுக் கொட்டினார்கள். நான் இளையராஜா அண்ணனிடம் கூற வந்தேன். அப்போது "அக்காட்சிக்கு உச்சுக் கொட்டினார்களா? அதற்குத் தான் அக்காட்சிக்கு நான் பின்னணி இசை அமைக்கவில்லை" என்று தெரிவித்தார். எந்த காட்சிக்கு பின்னணி இசை தேவையில்லை என்று தெரிந்த ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே" என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் இயக்குநர் பி.வாசு.
* நாயகிகள் ராதா, பூர்ணிமா பாக்யராஜ், மீனா, பானுப்ரியா, கெளதமி ஆகியோர் மேடையேறி இளையராஜாவின் பாடல்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.
* "சார்.. என்னை பாரதிராஜா உங்களிடம் இவ தான் நாயகி என்று அறிமுகப்படுத்திய போது "இதான் கப்பகிழங்கா?" என்று கேட்டீர்கள் அது ஏன்?" என்று இளையராஜாவிடம் கேள்வி எழுப்பினார் ராதா. அதற்கு இளையராஜா "யாரையும் அப்படிச் சொல்லும் பழக்கம் எனக்கில்லை. நாயகியாக ஒப்பந்தம் ஆகும் முன்பே "வாடி என் கப்பகிழங்கே" பாடலை பதிவு செய்துவிட்டோம். அதனால் தான் அவ்வாறு சொன்னேன்" என்று பதிலளித்தார் இளையராஜா.
* ராதா, பூர்ணிமா பாக்யராஜ், மீனா, பானுப்ரியா, கெளதமி அனைவரும் மேடையில் இருக்கும் போதே கமலை அரங்கினுள் அழைத்தார்கள். அப்போது "கமலை அனைத்து நாயகிகளும் அழைத்துச் சென்று இளையராஜாவுக்கு அருகில் அமர வைப்பார்கள்" என்று தெரிவித்தார் தொகுப்பாளர் டிடி.
* பின்னணி பாடகிகள் சுசீலா, உமா, சைலஜா, சித்ரா, ஜென்ஸி ஆகியோர் இளையராஜாவின் இசைக்கு பாடிய தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.
* பாடகர் மனோ "இந்த வாழ்க்கை இளையராஜா போட்ட பிச்சை" என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். தொடர்ந்து "மாங்குயிலே", "இளமை என்னும் பூங்காற்று" ஆகிய பாடல்களைப் பாடினார்.
* இயக்குநர் கெளதம் மேனன், பாடகர் கார்த்திக் மற்றும் கிட்டார் பிரசன்னா ஆகியோர் இணைந்து 'இளையராஜா UNPLUGGED' என்ற பெயரில் "கோடை கால காற்றே", "நீதானே என் பொன்வசந்தம்", "காற்றைக் கொஞ்சம்", "ராசாசே உன்னை நம்பி" உள்ளிட்ட 6 பாடல்களைப் பாடினார்கள்.
* பலத்த கரகோஷத்திற்கு இடையே மேடையில் தோன்றினார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். "நான் இளையராஜாவை பற்றி என்ன பேசுவது? அவருடைய பாடல்களில் 90% ஆண் குரல் நான் பாடினது தான். ஆகையால் நான் பாடினால் போதும் என நினைக்கிறேன்' என்று பாடத் தொடங்கினார்.
* "என்ன சத்தம் இந்த நேரம்", 'ஓ ப்ரியா ப்ரியா', 'இளைய நிலா பொழிகிறதே', 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி', 'ஜோதிலேகே(கன்னடம்)' ஆகிய பாடல்களைப் பாடி அனைவரையும் இசை வெள்ளத்தில் மூழ்கச் செய்தார். இவர் பாடும் போது பிரகாஷ்ராஜ், கார்த்தி, குஷ்பு ஆகியோர் பலத்த கரவொலி எழுப்பி தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்.
* 'இளைய நிலா பொழிகிறதே' என்ற பாடலை பாடி முடித்தவுடன், "இப்பாடலின் பின்னணி இசையில் ப்ளூட் இசை ரொம்ப சாதாரணமாக தெரியும். ஆனால் அதை யாராலும் மறுபடியும் கொண்டு வர முடியாது. அது தான் இளையராஜா!" என்று குறிப்பிட்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
* 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடலைப் பாடி முடித்தவுடன், "இப்பாடலை மும்பையில் பதிவு செய்தோம். இன்னும் ஞாபகம் இருக்கிறது. இப்பாடல் பதிவு முடிந்தவுடன் அனைத்து இசைக் கலைஞர்களும் எழுந்து நின்று கை தட்டினார்கள்" என்று தெரிவித்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
* ஜெயராம், குஷ்பு, வெங்கடேஷ் ஆகியோர் மேடையில் தங்களுடைய வாழ்க்கையில் இளையராஜா இசையின் பங்கு குறித்து பேசினார்கள்."காரில் நீண்ட தூர பயணம் செல்லும் போது பெட்ரோல் இருக்கிறதா என்று பார்ப்பது போல இளையராஜாவின் சிடி இருக்கிறதா என்று பார்ப்போம். அது தான் இளையராஜா" என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் குஷ்பு.
* இளையராஜாவின் இசைச் சாதனையைப் பாராட்டி இந்நிகழ்ச்சி யில் அவருக்கு லக்ஷ்மி நாராயணா சர்வதேச விருது வழங்கப்பட்டது. எல்.சுப்பிரமணியம் இந்த விருதை வழங்கினார்.
* இளையராஜா மற்றும் கமல் ஒன்றாக மேடையேறினார்கள். அப்போது 'மருதநாயகம்' படத்தின் சில காட்சிகள் திரையிடப்பட்டது. அப்படத்திற்காக இளையராஜா இசையில் கமல் பாடிய "பொறந்தது பனையூரு மண்ணு" என்று பாடலை இருவருமே மேடையில் பாடினார்கள். அதனைத் தொடர்ந்து 'மருதநாயகம்' படம் மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக தன்னுடைய பேச்சில் கமல் குறிப்பிட்டார்.

நன்றி : இந்து நாளிதழ்
இளையராஜா ஆயிரம் : சில துளிகள் Reviewed by Manohar Veera on பிற்பகல் 8:39:00 Rating: 5

கருத்துகள் இல்லை:

");
All Rights Reserved by !¡...என் செய்வேன்...¡! © 2014 - 2015
Powered By Blogger, Designed by Sweetheme

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இயக்குவது Blogger.